பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தி திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சல்மான்கான். மும்பை மாநகரில் உள்ள பாந்திரா பகுதியில் கேலக்சி அடுக்கு மாடி குடியிருப்பில் சல்மான் கான் வசித்து வருகிறார்.
ஏற்கெனவே, நிழல் உலக தாதாக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளான சல்மான்கான், அவர்களின் ஹிட் லிஸ்டிலும் இருக்கிறார். ஆகவே, 2022 ஆம் ஆண்டு, சல்மான் கானின் பாதுகாப்பு ஒய்-பிளஸாக உயர்த்தப்பட்டது.
மேலும் தற்காப்புக்காக தனிப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் செல்லவும் சல்மான் கானுக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இது போதாது என்று, மரணப் பயத்தால், கூடுதல் பாதுகாப்புக்காக தனக்கென்று பிரத்யேக கவச வாகனத்தையும் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான், கடந்த ஏப்ரல் 14ம் தேதி, சல்மான்கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், நான்கு முறை அவரது வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, வேகமாக தப்பிச் சென்றனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரும் தொப்பி அணிந்து முதுகுப் பைகளுடன் சென்றது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளின் தகவல் படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன என்றும், அவர்களுக்கு 10 முறைகள் சுடுவதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்றும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் ajay kashyab அஜய் காஷ்யப், gautam vinod bhatia கௌதம் வினோத் பாட்டியா, vaspi mehmood khan வாஸ்பி மெஹ்மூத் கான் rizwan haasan alias javed khan ரிஜ்வான் ஹாசன் என்ற ஜாவேத் கான் deepak hawasing alias jhon walmiki தீபக் ஹவாசிங் அலியாஸ் ஜான் வால்மீகி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், நவி மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. அதில் சல்மான்கானை படுகொலை செய்வதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டம் விவரிக்கப்பட்டுள்ளன.
குற்றப் பத்திரிகையில், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யபப்ட்டது போல சல்மான் கானையும் படுகொலை செய்ய திட்டமிடப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் வாங்கியதும், மேலும் அதிநவீன ஆயுதங்களை பொருட்களை வாங்க தயாராகி வந்ததும் பட்டியலிடப் பட்டுள்ளன.
திரைப்பட படப்பிடிப்பின்போது அல்லது தனது பன்வெல் பண்ணைவீட்டிலிருந்து சல்மான் கான் வெளியே புறப்படும் போது சல்மான் கானைப் படுகொலை செய்ய வேண்டும் என்று சதி திட்டம் உருவாக்கப் பட்டிருந்தது.
சல்மான் கானின் ஒவ்வொரு அசைவையும் சுமார் 60 முதல் 70 நபர்கள் கண்காணித்து வந்துள்ளனர். இந்த மர்ம நபர்கள் மும்பையில் உள்ள சல்மான் கானின் வீடு, பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் (Goregaon ) கோரேகானில் உள்ள (Film City). பிலிம் சிட்டியில் ஆகிய இடங்களில் சல்மான் கானை விடாமல் பின் தொடர்ந்து கண்காணித்தது வந்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தானில் இருந்து AK 47, AK 92 மற்றும் M-16 துப்பாக்கிகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை வாங்கி உள்ளனர். ஏற்கெனவே, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவைப் படுகொலை செய்ய பயன்படுத்திய துருக்கிய தயாரிப்பான (Zigana pistol )ஜிகானா பிஸ்டலையும் வாங்க முடிவு செய்துள்ளனர்.
சல்மான் கானை படுகொலை செய்ய, பிஷ்னோய் கும்பல் 25 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை சல்மான் கானைப் படுகொலை செய்யும் திட்டம் தீட்டப்பட்டதாக காவல் துறையினர் குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சல்மான் கானை கண்காணிக்க உதவிக்கு வைத்துக் கொண்டதாகவும், குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், குற்றப்பத்திரிகையில் கோல்டி ப்ரார் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த சிறுவர்கள் செயல்பட்டுள்ளனர். இதற்காக, கோல்டி ப்ரார் மற்றும் அன்மோல் ஆகியோர் சுமார் 16 உறுப்பினர்களுடன் தனியான வாட்ஸ்அப் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
கோல்டி ப்ரார் மற்றும் அன்மோல் பிஷ்னோய் ஆகியோரின் உத்தரவுக்காக, அனைவரும் காத்திருந்ததாகவும் உத்தரவு கிடைத்தவுடன் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி சல்மான்கானை படுகொலை செய்ய தயாராக இருந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 15ம் தேதி ஆயுதங்களை தந்ததோடு, சல்மானை படுகொலை செய்ய போகும் நபர்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் விஷ்னோய் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் என்று கூறியுள்ள காவல்துறையினர், அதற்கான ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாளே, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சல்மான் கானை நேரில் சந்தித்தார். அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியதோடு உடனடியாக இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். அதன் படியே, இப்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.