முருகனுக்கு படை ஆறு என்கிறோம். ஆனால் சிவபெருமானுக்கும் படை வீடு உண்டு . ஒன்றல்ல இரண்டல்ல எட்டு படை வீடுகள் சிவபெருமானுக்கு உண்டு. அவை அட்ட வீரட்டத் தலங்கள் என்று போற்றப் படுகின்றன. அவற்றில் ஒரு முக்கியமான கோயிலைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
நினைத்தை அள்ளி தரும் திரு வழுவூர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
ஊழிக் காலத்தில் எல்லா உலகங்களும் அழிந்தும் இவ்வூர் மட்டும் அழியாமல் நிலைத்து நிற்கும். ஊழி அழிவில் இருந்து வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது.
சிவபெருமான் செய்த எட்டு வீரச் செயல்களில் ஒன்றான யானையின் தோல் போர்த்த அற்புத செயல் நடந்தது இத்தலத்தில் தான்.
ஒரு காலத்தில் இந்த இடம் காடாக இருந்தது. இந்த இடத்தில் பல முனிவர்கள் தங்கள் மனைவிகளுடன் வசித்து வந்தனர். ஆகவே இந்த இடம் “தாருகா வனம்” என்று அழைக்கப்பட்டது. இந்த முனிவர்கள் “யக்ஞம்” செய்தலே தங்கள் வழிபாடாக கொண்டிருந்தனர்.
“முக்தி” அடைய இந்த மாதிரி யாகம் செய்தால் போதும், இறைவனை வழிபடத் தேவையில்லை என்ற எண்ணத்தில் இருந்தனர். இந்த எண்ணத்தால், தாருகாவனத்து முனிவர்கள் இறைவனை வழிபடத் தயாராக இல்லை. தாங்களே உயர்ந்தவர்கள் என்று கர்வம் கொண்டிருந்தனர்.
அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்த இறைவன், பேரழகுடைய ஆடவனாக பிச்சாடனர் திருக்கோலத்தில் தாருகாவனத்துக்கு வந்தார். இறைவனின் பேரழகில் மயங்கிய மக்கள் அனைவரும் இறைவனின் பின்னே சென்றனர்.
அதே நேரத்தில், மகாவிஷ்ணு அழகிய மோகினி வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய “தாருகாவன” முனிவர்கள், செய்து கொண்டிருந்த யாகத்தை நடத்த மறந்துவிட்டனர்.
தங்களுக்கு பாடம் புகட்டவே சிவபெருமான் வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும், சிவபெருமானை அழிக்க அபிசார வேள்வி நடத்தி, அதில் இருந்து கஜ சூரன் என்ற யானையை உருவாக்கி சிவபெருமான் மீது ஏவி விட்டனர்.
அபிசார வேள்வியில் தோன்றிய கஜ சூரன் சினந்து ஓடிவர, கஜ சூரனின் உடம்புக்குள் இறைவன் சென்றார். வலி தாங்காத தாளாத கஜ சூரன், பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் கஜ சூரனை அழித்து, தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். இறைவனைக் காணாது வருத்தமுற்ற அம்மைக்கு, முருகப் பெருமான் “இதோ தந்தையார்” என்று சுட்டிக் காட்டியதாக சொல்லப்படுகிறது. இதை குறிக்கும் வகையில், இந்த கோயிலில் சிற்பங்கள் உள்ளன.
சிவபெருமான் கஜசூரனின் தோலை உரித்து போர்த்தினார். எனவே இங்குள்ள இறைவன் “கரி உரித்த சிவன்” என்று போற்றப்படுகிறார். மேலும் “கஜ சம்ஹார மூர்த்தி” என்றும் போற்றப் படுகிறார்.
1000 ஆண்டுகளுக்கும் தொன்மையான இந்த திருக்கோயில், சோழர் காலத்தில் பிரம்மாண்டமாக கட்டப் பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு நோக்கிஅமைந்திருக்கும் இந்தக் கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரர், கஜாரி, ஞானசபேசன் என்ற திருப் பெயர்களால் அழைக்கப் படுகிறார். இந்த கோயிலில் அம்பிகை பால குஜாம்பிகை, இளங்கிளை நாயகி என்று அழைக்கப்படுகிறாள். இக்கோயிலில் உள்ள ஸ்ரீ கணபதி “செல்வ விநாயகர்” என்று அழைக்கப்படுகிறார்
இந்த கோவிலின் “கஜசம்ஹார மூர்த்தி” வடிவம் மிகவும் அற்புத வடிவமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில், ஸ்ரீ கஜசம்ஹார மூர்த்தியின் நடனம் “கஜசம்ஹார தாண்டவம்” என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஜேஷ்டா தேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதர்கள் உள்ளிட்ட தெய்வங்களும் இக்கோயிலில் உள்ளனர்.
ஆண்டுதோறும், மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோஸ்த்வ திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் ஒருநாள் “கஜ சம்ஹார” விழாவும் கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கோயிலில், மாசி மகம் நட்சத்திரம் வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது.
மார்கழி திருவாதிரை நட்சத்திரதில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை சோமவாரம் போன்ற முக்கிய நாட்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த கோவிலில் வந்து கஜ சம்ஹார மூர்த்தியை வழிபட்டு சென்றால் ஏவல் , பில்லி , சூன்யம் போன்ற மாந்திரீகம் பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கிறது என்று தலவரலாறு கூறுகிறது.
குறிப்பாக அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டுமென்றால் இந்த தலத்துக்கு ஒரு முறை சென்று வந்தால் போதும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இறைவனின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான இந்த தலத்து இறைவனை வணங்கி நலம் பெறுவோம்.