2011- 2012ம் ஆண்டு 21 சதவீதமாக இருந்த இந்தியாவின் வறுமை 8.5 சதவீதமாக குறைந்துள்ளது என்று NCERP ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மோடி 2.0 ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப் பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் இது ஒவ்வொரு ஏழைக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், NCAER என்ற அமைப்பு, சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய மனித வளர்ச்சியை கணக்கெடுத்து தந்துள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக NCAER தெரிவித்துள்ளது.
மேலும் டெண்டுல்கர் கமிட்டியின் மூலம் பணவீக்கம் சரி செய்யப்பட்ட வறுமைக் கோட்டை பயன்படுத்தி இந்தியாவின் வறுமைவிகிதம் மதிப்பீடு செய்யப் பட்டுளளதாக சொல்லப் பட்டிருக்கிறது. அதன் படி, 2011-2012 ஆம் ஆண்டு 21 சதவீதமாக இருந்த இந்தியாவின் வறுமை 8.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இதில், 3.2 சதவீத பேர் பிறக்கும் போதே வறுமையில் உள்ளதாகவும், 5.3 சதவீதம் பேர் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களால் வறுமையில் தள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிராமப் புறங்களில் 24.8 சதவீதமாக இருந்த வறுமை, 8.6 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 13.4 சதவீதமாகவும் இருந்த வறுமை 8.4 சதவீதமாக சரிந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய புள்ளியியல் அலுவலகம் தந்துள்ள குடும்ப நுகர்வு செலவீனங்களின் அடிப்படையில்,இந்தியாவில் வறுமை நிலை 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கலாம் என்று இந்தியாவின் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால், பொது விநியோக முறையின் மூலம் அதிகமான உணவு மானியம் வழங்கப் படுவதும், பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருவதும், வறுமை விகிதம் இந்தியாவில் குறைவதற்கு காரணமாக இருக்கிறது என்றும் NCAER ஆய்வறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து வரும் மத்திய அரசு, வறுமையில் இருக்கும் மக்களைப் பொருளாதாரத்தில் உயர்வதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது . இதன் காரணமாகவே , இந்தியாவின் வறுமை கணிசமாக குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
சமூக கட்டமைப்பில் ஏழைகளுக்கான உரிய பாதுக்காப்பு, அவர்களுக்கான பொருளாதார வளர்ச்சி, அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்திவரும் அரசால் , இந்தியாவில் வறுமையை நிச்சயம் ஒழித்து விட முடியும் என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.