டி-20 உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டி-20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை வென்றது.
பாா்படாஸிலிருந்து இந்திய அணி தாயகம் திரும்பவிருந்த நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘பெரில்’ புயல் காரணமாக இந்த பயணம் தாமதமானது.
புயல் கரையை கடந்ததை அடுத்து, பார்படாஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் தாயகம் புறப்பட்டனர். இந்த விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. அப்போது, விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ITC மவுரியா ஹோட்டலுக்கு வருகை தந்த இந்திய வீரர்கள், உலகக்கோப்பையுடன் உற்சாகமாக நடனமாடினர்.
காலை சுமாா் 11 மணியளவில் இந்திய அணி வீரர்கள் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மும்பை செல்லவுள்ள இந்திய அணி, நாரிமன் பாய்ன்ட் பகுதியிலிருந்து மெரைன் டிரைவ் வரை, திறந்தவெளி பேருந்தில் கோப்பையுடன் ஊர்வலமாக செல்கின்றனர். . பின்னா், மாலையில் வான்கடே மைதானத்தில் அவா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.