சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தியது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
பல்வேறு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இந்நிலையில், இரவு 9 மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கோயம்பேடு, வளசரவாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது.
மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அபுதாபி, கோவை, மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. இதேபோல், 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.