பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க, அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 8 அமைச்சரவை குழுக்களை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முப்படை தளபதிகள், ரிசர்வ் வங்கி ஆளுநர் உட்பட முக்கிய நியமனங்கள் குறித்து முடிவெடுக்கும் குழுவில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இடம்பெற்றுள்ளனர்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில், பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழுவில், சிறப்பு அழைப்பாளர்களாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சரவை குழுக்களில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.