வீர மரணம் அடைந்த அக்னி வீரர் அஜய் குமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களுடன் இந்திய இராணுவம் பதிலளித்துள்ளது. இதன் மூலம் ராகுலின் பொய் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இந்திய இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பாக அக்னி வீர் திட்டம் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்னி வீர் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணியாற்ற 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் அழைக்கப்படுகிறது.
அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 4. 76 லட்சம் ரூபாயில் தொடங்கி 6.92 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப் படுகிறது. பணியில் இருக்கும் போது 48 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு தரப்படுகிறது. பணி நிறைவு பெறும் போது 10.01 லட்சம் ரூபாய் தனித் தொகையாக அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பணியில் நீடிக்க விரும்பும் இளைஞர்களில் தகுதி அடிப்படையில் 25 சதவீத பேருக்கு நிரந்தரப் பணிநியமனம் வழங்கப்படுகிறது.
மேலும் மத்திய அரசு ஊழியருக்கு பயணத்தின் போது வழங்கப் படும் கட்டண சலுகைகள், ரேஷன் வசதிகள் உட்பட அனைத்தும் சலுகைகளும் வழங்கப் படுகின்றன.
ஒருவேளை பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கூடுதல் மானிய நிதியாக 44 லட்சம் ரூபாய் அவர்கள் குடும்பத்துக்கு தரப்படுகிறது. இந்த இழப்பீடுகள் x, y, z என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
கடந்த வாரம் 18 வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் அக்னிவீர் திட்டம் குறித்த பல தவறான தகவல்களை மக்களவையில் தெரிவித்திருந்தார்.
சிறிதும் தாமதிக்காமல், ராகுல் காந்தி தவறான அறிக்கைகளை வெளியிட்டு மக்களவையை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக தெரிவித்த மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்யும் அக்னிவீரரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அக்னிவீர் திட்டம் தொடர்பாக மக்களவையில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொன்னதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, உயிர் தியாகம் செய்த அக்னிவீரரின் தந்தை சொல்வதைக் கேளுங்கள் தனது எக்ஸ் பக்கத்தில், ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த அக்னிவீரர் அஜய் குமாரின் தந்தையின் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலதில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஜனவரி 18 ஆம் தேதி நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 23 வயதான அஜய் குமார் என்ற அக்னி வீரர் வீரமரணம் அடைந்தார்.
இந்நிலையில், அக்னிவீரர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு இதுவரை 98.39 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி இருப்பதாக கடந்த புதன்கிழமை,இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் , நாட்டுக்காக உயிர் ஈந்த அக்னி வீரரின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டன என்றும், அக்னிவீரரின் குடும்பத்திற்கு ஏற்கனவே 98.39 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசின் காப்பீடாக 48 லட்சம் ரூபாயும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நிதி நிறுவனங்களிடமிருந்து 50 லட்சம் ரூபாயும் கூடுதலாக 39,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணுவ நல நிதியில் இருந்து 8 லட்சம் ரூபாயும், அவரது மீதமுள்ள பணி காலம் முடியும் வரை உள்ள ஊதிய நிலுவை தொகையாக சுமார் 13 லட்சம் ரூபாயும் , சேவா நிதி நிதியாக 2.3 லட்சம் ரூபாயும் மொத்தம் 67.3 லட்சம் ரூபாயும் உரிய அலுவலக நடைமுறைக்குப் பிறகு வழங்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்திருக்கிறது.
இதன்படி, மொத்த இழப்பீட்டுத் தொகை தோராயமாக 1 கோடியே 65 லட்சம் ரூபாயாக இருக்கும் என்றும் விளக்கம் தரப் பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் விளக்கத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அக்னிவீரர்களின் நலனுக்காக இந்திய ராணுவம் உறுதிபூண்டுள்ளது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.