பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, சாதனையாளர்களை வரவேற்க தாம் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களை பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது ஒலிம்பிக்கில் வெல்லும் முனைப்புடன் இருக்கும் வீரர்களை, உற்சாகமாக வரவேற்கும் மனநிலையில் தான் இருப்பதாக தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்களைத் தொடர்ச்சியாக சந்தித்து அவர்களிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்க விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதேபோல விளையாட்டு வீரர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சாக்குபோக்கு சொல்பவர்களால் சாதிக்க முடியாது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் வீரர்கள் பல்வேறு தடைகளை சந்தித்தாலும், தேசத்தையும், மூவர்ணக் கொடியையும் தங்களது நெஞ்சத்தில் ஏந்திக் கொள்வதாக பெருமிதம் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோரும் பிரதமர் மோடியுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினர்.