திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சம்பூர்ணதா அபியான் எனும் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது
அனைத்துப் பகுதி மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் மத்திய அரசின் சம்பூர்ணதா அபியான் லட்சிய இலக்கு வட்டார மேம்பாட்டுத் திட்டம் இன்று திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நித்தி ஆயோக் துணை ஆலோசகர் திரு ஆர். சரவணபவன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டம் நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் 500 வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றார். இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி,விவசாயம் போன்ற அடிப்படை கட்டமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்றைய தொடக்க விழாவில் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒளிப்பதிவுக் காட்சிகளும் திரையிடப்பட்டன.
சம்பூர்ணதா அபியான் உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது பின்னர் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது.
பின்னர் ஜவ்வாதுமலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிருடன் திரு சரவண பவன் கலந்துரையாடினார். அங்கன்வாடி மையங்களுக்கு சென்ற அவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் இணை உணவு குறித்தும் ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் “சம்பூர்ணதா அபியான் ” திட்டத்தை சிறப்புத் திட்ட இயக்குநர் நிலை அதிகாரி ரூபேஷ் சிங் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தின் பயன்களை இவ்வட்டாரத்தில் முழுமையாக எய்திடவும், வட்டாரத்தை ஆரோக்கியமானதாகவும், அதிகாரமிக்கதாகவும், வளமிக்கதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். லட்சிய இலக்கு நிலையிலிருந்து எழுச்சிமிகு நிலைக்கு முன்னேற்றம் காண இத்திட்டப் பணிகள் பயன்படும் என்று திரு ரூபேஷ் சிங் தெரிவித்தார்.
பின்னர், வேளாண்மை, மருத்துவம், மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.