தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து 3வது மாதமாக பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் தட்டுப்பாட்டால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த இரு மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படாத நிலையில், இந்த மாதமும் இதே நிலை தொடருவது கடும் கண்டனத்துக்குறியது எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படும் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வியை வெளிப்படுத்தியவதாக அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக அரசால், பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.