பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொறுப்பில் இருக்கும் காவல்துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே இந்த படுகொலை நிரூபித்துள்ளதாக எல்.முருகன் கூறியுள்ளார்.
வேங்கை வயல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் ஆகிய சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் திமுக அரசு மெத்தனமாக இருந்ததன் தொடர்ச்சியே ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்பதாகவும் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்களுடன் தமிழக பாஜக துணை நிற்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
நம் சமூகத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை என்றும், ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டதாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதலமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, மு.க.ஸ்டாலின் தம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.