உலக அளவில் பெரும் தொழில் அதிபர்களின் வரிசையில் முன்னனியில் இருக்கும் முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழா கோலாலகமாக தொடங்கி இருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த திருமணத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர் . அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி-நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் வரும் 12ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள், ஜாம்நகரில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், face book நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட பல நாட்டுத் தலைவர்களும், அரசு உயர்அதிகாரிகளும்,கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான், சல்மான் கான் தொடங்கி , பிரபல விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். முக்கியமாக கிராமி விருது வென்ற பாடகி ரிஹானா கலந்து கொண்ட பாடல் பாடி அசத்தினார்.
ஆனந்த் அம்பானி -ராதிகா மெர்ச்செண்ட்டின் திருமணத்துக்கு முந்தைய இரண்டாவது கொண்டாட்டங்கள் , இத்தாலியில், மிகப்பெரிய சொகுசு கப்பலில் நான்கு நாட்கள் நடைபெற்றன.
இதில், சச்சின் டெண்டுல்கர், சல்மான் கான், ஆலியா பட், கரீனா கபூர் , ஜான்வி கபூர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பிரபல பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.
மேலும், இங்கிலாந்தின் புகழ் பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி கலந்து கொண்டு தனது இசை நிகழ்ச்சியால் விருந்தினர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்க அம்சமாக சொல்லப் பட்டது.
திருமண நாள் நெருங்கி வரும் நிலையில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்செண்ட் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் ஆச்சரிய படுத்தி இருக்கிறது.
திருமண பத்திரிக்கையே ஒரு பூஜை அறை போல வடிவமைக்கப் பட்டுள்ளது. திருமண பத்திரிக்கையின் கதவைத் திறந்தவுடன், விஷ்ணு மந்திரம் ஒலிக்கிறது. வெள்ளியிலான சிறிய கோயில் போன்ற அமைப்பு உள்ளது.
திருமணப் பத்திரிக்கையைத் திறந்தால், அந்த கோயில் போன்ற சிறிய பெட்டியைத் திறந்தால், திருமண அழைப்பிதழ் வருகிறது.
சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முழுவதும் வெள்ளியில் கலைநயத்துடன் தயாரிக்கப் பட்டுள்ளது.
முதல் திருமணப் பத்திரிக்கையை காசி விஸ்வநாதருக்கு வைத்து சுவாமியின் ஆசி பெற்றிருக்கிறார்கள் அம்பானி தம்பதியினர்.
தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு முன்னதாக , ஏழை பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 50 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முகேஷ் அம்பானி தம்பதியர் நடத்தி வைத்திருக்கின்றனர். நவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடந்த இந்த இலவச திருமண விழாவில், பழங்குடியின ஜோடிகளின் குடும்ப உறுப்பினர்களுடன், கிட்டத்தட்ட 800 பேர் கலந்து கொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட மணப்பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் சீர்வரிசை பொருட்களையும் மற்றும் தங்க நகைகள்,வெள்ளி மூக்குத்தி,வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் வழங்கி இருக்கிறார்கள்.
மேலும், புதுமணத் தம்பதியருக்கு ஓராண்டுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகை பொருட்கள், சமையலுக்குத் தேவையான கேஸ் அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்கள் மின்விசிறி காட்டில்,மெத்தை,தலையணை என ஏராளமான பொருட்களை சீதனமாக தந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், திருமணத்துக்கு முன்னதாக நடக்கும் மொசலு விழா நடைபெற்றது. இது மணமகனின் தாயார் வழி உறவுகள் மணமக்களை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சி ஆகும். நீதா அம்பானியின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், அவரது தாயார் ஸ்ரீமதி. பூர்ணிமா தலால் மற்றும் அவரது சகோதரி திருமதி மம்தா தலால் உள்ளிட்டவர்கள் மணமக்களுக்கு ஆசி வழங்கினர்.
இந்திய கூட்டுக் குடும்பத்தின் அடையாளமாக விளங்கும் இந்நிகழ்வில், அம்பானி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்செண்ட் திருமண விழாவில் பங்கேற்று இசை நிகழ்ச்சியில் பாடி மணமக்களை வாழ்த்துவதற்காக பிரபல பாடகர் ஜஸ்டின் பீவர் மும்பை வந்திருக்கிறார்.
வரும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் திருமண வைபவம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. சுப விவாகம், சுப ஆசீர்வாதம், மங்கல் உத்சவம் என ஜூலை 12 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை கோலாகலக கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.