பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது ரவுடி ஆற்காடு சுரேஷின் பெயர். இருவருக்கும் என்ன தொடர்பு? உண்மையிலேயே ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக கொல்லப்பட்டாரா ஆர்ம்ஸ்ட்ராங்? விரிவாக பார்க்கலாம்.
சென்னை பெரம்பூரில் தமது வீட்டுக்கு அருகிலேயே 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங். இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி BOY உடையணிந்து வந்தவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலைதான் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தெரிகிறது.
ஒருவாரமாக ஆர்ம்ஸ்ட்ராங் வீடு அருகே ஆட்டோவை நிறுத்துவது போல திருமலை நோட்டம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆர்ம்ஸ்ட்ராங் எப்போது எப்படி வருகிறார்? எவ்வளவு நேரம் அங்கு இருக்கிறார்? அவரோடு எத்தனை பேர் வருகிறார்கள்? என்பதையெல்லாம் அறிந்து சொன்னவர் திருமலை என்கிறது காவல்துறை வட்டாரம்.
எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இதற்கு பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.
முழு விவரம் தெரிந்த பிறகே அனைத்து தகவல்களையும் சொல்லுவோம் என்று காவல் ஆணையர் கூறினாலும், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் பெயர் பலமாக அடிபடுகிறது. ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சுரேஷின் சகோதரர் புன்னை பாலு சரண் அடைந்திருப்பதே அதற்கு காரணம். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்டார் ஆற்காடு சுரேஷ்.
முப்பதுக்கும் அதிகமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷ், அரசு ஊழியராக தமது வாழ்க்கையை தொடங்கியவர் என்று சொன்னால் நம்புவதற்கு சற்று சிரமமாக இருக்கும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் காவலராக பணிபுரிவதற்காக ஆற்காட்டிலிருந்து சென்னை புளியந்தோப்பு பகுதிக்கு வந்தார் சுரேஷ். அரசு வேலையோடு சேர்த்து கந்துவட்டிக்கும் கடன் கொடுத்ததால் பிரச்னைகளும் பஞ்சாயத்துகளும் வரிசைகட்டத் தொடங்கின. 1998-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்ற சுரேஷுக்கு ரவுடிகளின் தொடர்பு கிடைத்தது.
ஆள்கடத்தலை தொடர்ந்து செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டதால் சுரேஷின் NETWORK ஆந்திரா வரை நீண்டது. தனி கூலிப்படையுடன் அட்ராசிட்டியைத் தொடங்கிய சுரேஷ் அதன் பலனாக பிற ரவுடிகளின் பகையையும் கொலை வழக்குகளையும் பெற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த பெண் தாதா கஞ்சா அஞ்சலையுடன் சுரேஷுக்கு தொடர்பு இருந்தது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியுமான தென்னரசுவுக்கும் சுரேஷுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2010-ஆம் ஆண்டு தென்னரசுவின் கூட்டாளியான ரவுடி சின்னாவையும், வழக்கறிஞர் பகத்சிங் என்பவரையும் கொலை செய்தார் ஆற்காடு சுரேஷ்.
அதற்கு பழிவாங்குவதற்காக சுரேஷின் நண்பரான வெள்ளை உமா என்பவரை தென்னரசு தரப்பு கொலை செய்தது. அதனைத் தொடர்ந்து 2015-ல் குடும்பத்தினர் முன்னிலைலேயே தென்னரசுவின் முகத்தை சிதைத்து கொலை செய்தது சுரேஷ் தரப்பு. 8 ஆண்டுகள் கழித்து 2023-ல் சென்னை பட்டினப்பாக்கத்தில் முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டார் ஆற்காடு சுரேஷ். தென்னரசுவின் சகோதரர் ரவுடி பாம் சரவணன்தான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சுரேஷ் கொலையில் ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு தொடர்பு இருக்கலாம் என அவரது கூட்டாளிகள் சந்தேகித்ததாக தெரிகிறது. இதற்கிடையே சுரேஷின் நண்பரான ரவுடி மாதவனும் கொல்லப்பட்டது அவரது ஆதரவாளர்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் சுரேஷின் பிறந்தநாளான ஜூலை 5-ஆம் தேதி ஆர்ம்ஸ்ட்ராங்கை கொலை செய்து தங்கள் பழியை அவர்கள் தீர்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கில் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.