அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டுமென மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.
தாய் பெயரில் ஒவ்வொருவரும் மரக்கன்று நட வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கிவைத்தார். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மரக்கன்று நட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவநிலை மாற்றம் ஒட்டுமொத்த தேசத்தையும் பாதிப்பதாகவும், உலகில் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில், இயற்கையோடு இயைந்த வாழ்வை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு ஒவ்வொருவரும் வாழ்வுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி கூறியதை நினைவுகூர்ந்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாம் என்ன பணி செய்தாலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.