உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 122 பேர் உயிரிழந்த நிலையில், சாமியார் போலே பாபாவின் காலடி மண்ணையும், அவர் பயணித்த கார் சென்ற போது கிளம்பிய புழுதியையும் சேகரிக்க ஏராளமானோர் ஒரே நேரத்தில் முயன்றதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள்… 24 ஆசிரமங்கள்… குறைந்தது 20 வாகனங்கள் சூழ உயர்ரக காரில் பவனி…தமக்கென தனி பாதுகாப்புப்படை… இப்படி உத்தரப்பிரதேசத்தில் தனி ராஜாங்கத்தையே நடத்தியவர் போலே பாபா.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் சாமியாராகி லட்சக்கணக்கான பக்தர்களையும், பின்தொடர்பவர்களையும் பெற முடியும் என்ற விநோதத்தை நிகழ்த்தி காட்டியவர்.
போலே பாபாவின் இயற்பெயர் சூரஜ்பால் ஜாதவ். உத்தரப்பிரதேச மாநில காவல்துறையில் வேலை செய்து கொண்டிருந்தார். 18 காவல் நிலையங்களிலும் உளவுப்பிரிவிலும் பணிபுரிந்த அனுபவம் கொண்ட சூரஜ்பால் 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் காவல்துறை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர், நீதிமன்றத்தை நாடி காவல் பணியை திரும்பப்பெற்றார். பின்னர் 2002-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு சொந்த ஊரான பஹதூர்பூரில் வசித்து வந்த சூரஜ்பால், திடீரென ஒருநாள் தாம் கடவுளுடன் பேசியதாக கூறினார்.
அந்தப்புள்ளியில்தான் நாராயண் சாகர் ஹரியாகவும், போலே பாபாவாக மாறினார் சூரஜ்பால் ஜாதவ். அவரது சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் குவியத் தொடங்கினர். பொது மக்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை பலரும் போலே பாபாவின் FOLLOWERS-ஆக மாறினர்.
பெரும்பாலும் வெள்ளை உடையில் காணப்படும் போலே பாபா, தாம் நன்கொடை வாங்குவதில்லை என்பார். ஆனால் மெயின்புரியில் பிரமாண்ட ஆசிரமத்தில் வசிக்கிறார். அதுமட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளில் நிறைய சொத்துகளையும் அறக்கட்டளை பெயரில் வாங்கியிருக்கிறார்.
நன்கொடையே வாங்காத ஒருவர் எப்படி இப்படி சொத்து சேர்க்க முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கான பதில்… போலே பாபா மறைமுகமாக நன்கொடை வாங்குகிறார் என்பதே. சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் பலர், போலே பாபாவுக்கு பணம் அளிக்கிறார்கள் என்றொரு தகவலும் சொல்லப்படுகிறது.
அவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கடவுளாகவே பார்க்கப்பட்டிருக்கிறார் போலே பாபா. அதன்காரணமாகவே 80 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டிய ஹத்ராஸ் கூட்டத்தில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா? போலே பாபாவின் காலடி மண்ணையும் அவர் பயணித்த கார் சென்ற போது கிளம்பிய புழுதியையும் சேகரித்து வீட்டில் வைத்தால் கஷ்டங்கள் நீங்கும் என்ற நம்பிக்கைதான். அதற்காக ஒரே நேரத்தில் பலர் முண்டியடித்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயிருக்கின்றன.
அதைவிட கொடுமை என்னவென்றால், இந்நிகழ்வு சமூக விரோதிகளின் திட்டமிட்ட சதி என்று போலே பாபா கருத்து தெரிவித்திருப்பது… நாம் என்ன சொன்னாலும் நம்புவதற்கு இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது என்பதைத் தவிர போலே பாபாவின் பேச்சுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? ஆலயத்திலும் ஆழ்மனதிலும் இறைவனைத் தேடாமல் போலி சாமியார்களின் பின்னால் மக்கள் ஓடிக்கொண்டு இருக்கும் வரை இன்னும் பல போலே பாபாக்கள் முளைப்பதை தவிர்க்க முடியாது.