ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக சம்பாயி சோரன் பதவியேற்றார். இந்நிலையில், ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இதையடுத்து, முதலமைச்சர் பதவி வகித்து வந்த சம்பயி சோரன் ராஜினாமா செய்தாா். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு, ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றாா்.
இதனைத் தொடா்ந்து, ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. பின்னர் மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.