பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் புத்த மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி மாலை, பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக பெரம்பூர் பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகத்தில் புதைக்க அனுமதி கோரி, அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை அவசர வழக்காக ஏற்று விசாரித்த உயர்நீதிமன்றம், குடியிருப்புகள் அல்லாத இடத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அரசும் அனுமதி வழங்கியதால், நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.