அவசர கதியில் கோயில்களில் திருப்பணிகள் நடத்தப்பட்டால் பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலய சுவாமி கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும்,
பல இடங்களில் வெடிப்பு உள்ளிட்ட சேதங்கள் காணப்படும் நிலையில் 90 ஆயிரம் சதுர அடி கொண்ட கோயிலின் மேள் தளத்தில் 20 ஆயிரம் சதுர அடி அளவிற்கு மட்டுமே ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், பழனி முருகன் கோயில் ஆகிய கோயில்களில் அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையில் திருப்பணிகள் செய்ததாக கணக்கு காட்டுவதற்காக, முறையாகவும், முழுமையாகவும் பணிகளை முடிக்காமல் கும்பாபிஷேகத்தை தமிழக அரசு நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதே அலட்சியம் தொடர்ந்தால் பக்தர்களை திரட்டி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்துவோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.