முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தடையை மீறி குட்கா பொருள்கள் விற்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில்வளவன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், எம்பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.