தமது காந்த குரலால் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர். யார் அவர்? பார்க்கலாம்.
இப்படி பாடினால் யாருக்குத்தான் பிடிக்காது? இந்தச் சிறுமியின் பெயர் ப்ரனைஸ்கா மிஸ்ரா (PRANYSQA MISHRA). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் பெற்றோருடன் அமெரிக்காவின் FLORIDA-வில் உள்ள TAMPA நகரில் வசித்து வருகிறார். மிக இளம் வயதிலேயே நன்றாக பாடும் திறனைக் கொண்ட ப்ரனைஸ்கா முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்காவின் தேசிய கீதத்தை பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
இரண்டு வயது முதலே பாடத் தொடங்கிய ப்ரனைஸ்காவுக்காக கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது அவரது குடும்பம். நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் பாடுவதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ளும் ப்ரனைஸ்கா, தமது திறமையை வெளிப்படுத்துவதற்காக பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான AMERICA’S GOT TALENT-ன் மேடையில் ஏறினார். AUDITION-ல் பங்கேற்பதற்காக வந்திருக்கும் இந்த தருணம் எப்படி இருக்கிறது என்று தொடங்கி நடுவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு தன்னம்பிக்கையுடன் நகைச்சுவையாக பதிலளித்தார் ப்ரனைஸ்கா.
உரையாடலுக்குப் பிறகு RIVER DEEP BY MOUNTAIN HIGH பாடலை ப்ரனைஸ்கா பாடத் தொடங்கிய அந்த நொடி நடுவர்களின் விழிகள் வியப்பால் விரிவதை காண முடிந்தது. அடுத்த சில விநாடிகளிலேயே தமது காந்த குரலால் அந்த அரங்கத்தை கட்டி இழுத்தார் ப்ரனைஸ்கா. தமது மகள் பாடுவதைக் கேட்டு அரங்கம் ஆர்பரிப்பதைக் கண்ட ப்ரனைஸ்காவின் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ப்ரனைஸ்கா பாடி முடித்ததும் GOLDEN BUZZER-ஐ அழுத்தி அவரை நடுவர்கள் தேர்வு செய்தனர். மேலும் மேடைக்கே வந்து அவரை பாராட்டினர். இந்த AUDITION-ல் வென்றால் உடனடியாக தமது பாட்டியுடன் பேச விரும்புவதாக பாடுவதற்கு முன்பு ப்ரனைஸ்கா கூறியிருந்தார். அதன்படி மேடையிலேயே தமது பாட்டியுடன் VIDEO CALL-ல் பேசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
AMERICA’S GOT TALENT நிகழ்ச்சி AUDITION-ல் ப்ரனைஸ்கா பாடிய வீடியோ YOUTUBE-ல் இரண்டு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.