16 முறை WWE CHAMPION பட்டம் வென்ற ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2025-ஆம் ஆண்டு நடைபெறும் 41-ஆவது WRESTLEMANIA-தான் தமது கடைசி போட்டி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் ஒருவர் ஜான் சீனா. 90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோ. அவர் களத்துக்குள் வருவதே தனி ஸ்டைலாக இருக்கும்.
1977-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர் ஜான் சீனா. World Wrestling Entertainment எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். தமது தனித்துவமான திறமையால் எதிராளியை துவம்சம் செய்து 16 முறை WWE CHAMPION பட்டம் வென்றவர். உடல் பருமன் மிக்க பல போட்டியாளர்களை தோளுக்கு மேல் தூக்கி மேடை மீது பொத்தென ஜான் சீனா வீசுவதை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.
WWE RING-க்குள் போட்டியாளரை பந்தாடும் ஜான் சீனாவுக்கு சிறுவயதில் இருந்தே எட்டுக்கால் பூச்சியை கண்டால் பயமாம். வலது கையால் வேகமாக குத்துவிடும் சீனா, இடது கையால் எழுதும் பழக்கம் உடையவர். WWE போட்டியில் ஜான் சீனாவுடன் பலமுறை கடுமையாக சண்டையிட்ட ரேண்டி ஆர்டன்-தான் அவரது நெருங்கிய நண்பர். சீனாவுக்கு பிடித்த WWE வீரர் ஹல்க் வோகன். சிறு வயதில் பள்ளியில் சக மாணவர்களால் தாக்கப்பட்டதே தாம் BODY BUILDER-ஆக மாற காரணம் என்று கூறியிருக்கிறார் ஜான் சீனா.
மல்யுத்த போட்டிகளுக்கு மத்தியிலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் ஜான் சீனா. 2022-ஆம் ஆண்டு முதல் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி வருகிறார்.
அவர்கள் ஆசையாக கேட்கும் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, சந்திக்க விரும்பும் நபர்களை அழைத்து வருவது போன்ற பணிகளை செய்து வருகிறார். இதுவரை 650-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தன்னலமற்ற மனிதர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.
ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் ஜான் சீனா, 96-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு ஆடைகளின்றி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை வழங்க ஆடையே இல்லாமல் மேடைக்கு வந்தார் ஜான் சீனா.
திரைப்பட பணிகள் காரணமாக அண்மைக் காலமாக WWE போட்டிகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த ஜான் சீனா, திடீரெனெ ஓய்வை அறிவித்துள்ளார். 2025-ஆம் ஆண்டு நடைபெறும் 41-ஆவது WRESTLEMANIA-தான் தமது கடைசி போட்டி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஜான் சீனாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.