ஹைட்ரஜன் பெராக்சைடு தொடர்பாக INSTAGRAM-ல் நடிகை சமந்தா வெளியிட்ட பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப்பின் அதிலிருந்து மீண்டார். INSTAGRAM உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது தொடர்பான பதிவுகளை அவ்வப்போது சமந்தா வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ‘நெபுலைசர்’ கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை அண்மையில் தமது INSTAGRAM பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “ஒரு பொதுவான வைரஸ் தொற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன்பு, ஒரு மாற்றுவழியை முயற்சித்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் தற்போது சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.
சமந்தாவின் பதிவுக்கு மருத்துவர் Cyriac Abby Philips என்பவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். THE LIVER DOC என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உடல்நலம் மற்றும் அறிவியல் குறித்த அறிவில்லாத, செல்வாக்கு மிக்க நடிகையான சமந்தா, சுவாச தொற்றுகளை தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம், ஹைட்ரஜன் பெராக்சைடை நெபுலைஸ் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது. ஏனெனில் அது உடல் நலத்துக்கு ஆபத்தானது. எனவே பொது சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் சமந்தா போன்ற பிரபலங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது முதுகெலும்பில்லாமல் மக்களை உயிரிழக்கவிடுவார்களா? என்று கடுமையாக பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, தம்மை சிறையில் அடைக்க வேண்டும் என்னுமளவுக்கு டாக்டர் கடுமையாக பேசியுள்ளார் என்றும், அவர் தம்மை விமர்சிப்பதற்கு பதிலாக இந்த பதிவுடன் டேக் செய்துள்ள தமது மருத்துவருடன் உரையாடுவதே சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து தமது கடுமையான பதிவுக்காக வருத்தம் தெரிவித்த மருத்துவர் Cyriac Abby Philips, நடிகை சமந்தா இனி இதுபோன்ற பதிவுகளை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே மேலும் பலரும் சமந்தாவின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்க இசை அமைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரிக்கி கேஜ், நடிகை சமந்தாவின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரைகுறையான அறிவுரைகளைக் கூறி மக்களின் உயிருடன் பிரபலங்கள் விளையாடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல் ஸ்குவாஷ் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா, சமந்தா குறிப்பிடும் சிகிச்சை உயிரிழப்பை ஏற்படுத்தினால் அதற்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் தமது பதிவு குறித்து விளக்கமளித்துள்ள சமந்தா, தாம் பரிந்துரைத்த முறை தமக்கு பலனளித்தது எனு்றும், அதனை ஒரு ஆப்ஷனாகத்தான் தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார். எல்லா சிகிச்சைக்கும் ஆதரவாகவும், எதிராகவும் இருவேறு நிலைப்பாடுகள் இருக்கும். சிகிச்சை தேவைப்படுவோருக்கான பதிவாகத்தான் அதை வெளியிட்டேனே தவிர, பிரபலானவர் என்ற முறையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் பரிந்துரைத்தேனே தவிர, இதில் பணம் ஈட்டும் நோக்கம் ஏதுமில்லை என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.