காலிஸ்தான் பிரிவினைவாத நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரித்பால் சிங், தம்மை காலிஸ்தான் கொள்கை கொண்டவர் அல்ல என்று கூறியதற்காக தனது தாயை விமர்சித்திருக்கிறார். குடும்பத்தை விடவும் காலிஸ்தானே தனக்கு முக்கியம் என்று அவர் கூறியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
காலிஸ்தான் பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. காலிஸ்தான் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நீண்ட காலம் தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங், பஞ்சாப் மாநில அரசால் கைது செய்யப்பட்டார். அஸ்ஸாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங், சிறையில் இருந்தபடியே மக்களவை தேர்தலில் பஞ்சாபின் கதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
பஞ்சாப் மாநிலத்துக்குள் செல்ல கூடாது, ஊடகங்கள் உட்பட யாருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில், மக்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக நான்கு நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். பதவியேற்பு விழாவுக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பதவியேற்ற உடனேயே மீண்டும் திப்ருகர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அம்ரித்பால் சிங் ஒரு காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் அல்ல என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அம்ரித்பால் சிங்கின் தாயார் பல்விந்தர் கவுர் தெரிவித்த இந்த கருத்துக்கள் பரபரப்பாக பேசப் பட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவு திரட்டிய மற்றும் அவருக்கு வாக்களித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது தாயாரின் காலிஸ்தான் விரோத கருத்துக்கு, சிறையிலிருக்கும் அமிர்தபால் சிங் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
தனது தாயை விமர்சித்து அம்ரித்பால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்சா ராஜ் கனவு காண்பது குற்றம் அல்ல, என்றும் அது பெருமைக்குரியது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், லட்சக்கணக்கான சீக்கியர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்த பாதையில் இருந்து பின்வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும், சீக்கியர்கள் சமரசம் செய்துகொள்வதைப் பற்றி ஒருபோதும் நினைக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து, அமிர்த் பால் சிங்கின் தாயார், தாம் சொன்னதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். ஊடகங்கள் உண்மைகளைத் தவறாக சித்தரிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கின்றன. எனவே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தனது பேச்சை வேறுவிதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.