ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டம் பத்னோடா கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த இக்கட்டான சூழலில், ராணுவ வீரர்களை இழந்த அவர்களது குடும்பத்தினருடன் தேசம் உறுதியாக நிற்பதாக தெரிவித்தார்.
தீவிரவாதிகளை வேரறுக்கும் முயற்சியில் ராணுவம் தீரத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த ஐந்து ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.