விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பட்டாசுக்கான மூலப்பொருட்களை கலக்கும் போது, உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், மாரியப்பன், முத்து முருகன் என்ற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சரோஜா, சங்கரவேல் ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பட்டாசு ஆலை போர் மேன் குணசேகரன் என்பவரை கைது செய்தனர்.
இதனிடையே, இறந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.