ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இது போருக்கான சகாப்தம் அல்ல என தெரிவித்தார்.
2 நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினை சந்தித்தார்.
அப்போது மக்களவைத் தேர்தலில் மோடி வென்று 3-ஆவது முறையாக ஆட்சியமைத்தற்கும், கடந்த மார்ச் மாதம் ரஷ்ய அதிபராக புதின் மீண்டும் பொறுப்பேற்றதற்கும் இரு தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருவதாகவும், அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
புதின் உடனான சந்திப்பை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் இருவரும் 17 முறை சந்தித்திருப்பதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் 22 முறை பரஸ்பரம் சந்தித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பை மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிரதமர், அமைதியை நிலைநாட்ட இந்தியா எப்போதும் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், இது போருக்கான சகாப்தம் அல்ல எனவும் தெளிவுபடுத்தினார்.