ஆர்.எஸ்.பாரதி நிச்சயம் சிறை செல்வார் என்றும், திமுகவின் ”பவர் சென்டர்” மருமகன் கையில் உள்ளதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ் பாரதியிடம் ரூ.1 கோடி கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்துக்கு நேரில் சென்று அவர் இந்த வழக்கை தொடர்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
திமுக அமைப்பு செயலாளர் 23.6.24 ல் என்னை பற்றி கூறியது பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சியில் கிட்டதட்ட 65 பேர் உயிரிழந்துள்ளனர். அரசியலுக்கு வந்த 3 ஆண்டுகளில் யார் மீதும் நான், அவதூறு வழக்கு தொடர்ந்தில்லை.
60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஆர்எஸ். பாரதி எல்லை கடந்து பேசிவிட்டார். ஆர்எஸ் பாரதி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு இன்று தொடுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ் பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம் எனத் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.பாரதிக்கு விரைவில் சம்மன் அனுப்படும், இந்த வழக்கை கடைசி வரை எடுத்து செல்வோம் எனத் தெரிவித்தார்.
மான நஷ்ட ஈடு வழக்கில் பெறும் நிதியில் கள்ளக்குறிச்சியில் போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பயத்தால் ஆர்எஸ் பாரதியை யாரும் எதிர்த்து பேசாததால் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். என்னை சின்ன பையன் என்று கூறிய ஆர்எஸ் பாரதியின் ராசியான கையை நான் பார்த்து விடுகிறேன்.
முதலமைச்சர் தனது மடியில் கனம் இருப்பதால் தமிழகத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள தனது அனுமதி வேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளார்.
டாஸ்மாக்கிற்கு சாராய ஆலை மூலம் சாராயம் வழங்குவது யார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சிபிஐ விசாரித்தால் தெரியவரும் எனத் தெரிவித்தார். மத்திய அரசு தமிழக அரசின் முடிவுகளுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. ஆனால் ஊழல் காரணமாக தமிழகம் வளரவில்லை.
எனது வெளிநாட்டு பயணத்திற்கு இன்னும் ஒன்றிரண்டு மாதம் உள்ளது, எனது வெளிநாட்டு பயணம் குறித்து விரைவில் கூறுகிறேன்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுக கூட்டணி கட்சிகளே சிபிஐ விசாரணை கேட்கின்றன.
அதானி நேற்று லீலா பேலசில் முதலமைச்சரை சந்தித்தாரா..? அல்லது அவரது மருமகனை சந்தித்தாரா..? சூப்பர் சி.எம். ஆக இரண்டு பேர் இருக்கின்றனர், அதில் அவரது மருமகன் முக்கியமானவர்.
செல்வப்பெருந்தகை குறித்து நானாக கூறவில்லை, அவர் பாஜக கட்சி பற்றி கூறிய பிறகே அவரது வழக்கு விவரங்களை வெளியிட்டோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அவர் மீது வழக்கு போடப்பட்டது.
குண்டாசில் கைதானவர் காங்கிரஸ் மாநில தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும் தான். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை மீது குண்டாஸ் சட்டம் பதிவு எனத் தெரிவித்தார். தமிழக அரசியலை திருத்த யார் மீதும் வழக்கு தொடர தயாராக உள்ளேன். காங்கிரஸ் கட்சியினர் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவர் காங். கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான் எனத் தெரிவித்தார்.
நான் சண்டை போட்டால்தான் தமிழக அரசியல் திருந்தும் என்றால் அதற்கு என்னை அர்ப்பணிக்க தயார். என்ன வந்தாலும் சந்திக்க தயார் என அண்ணாமலை சூழுரைத்தார்.