அமெரிக்காவில் வளர்ப்பு நாயால் வீட்டில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அப்படி என்ன செய்தது அந்த நாய்? பார்க்கலாம்.
அதிகாலை 4.40 மணி… அமெரிக்காவின் கொலராடோ நகரில் உள்ள ஒரு வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர், வளர்ப்பு நாயைத் தவிர… அதிகாலையிலேயே அது எழுந்துவிட்டதா? அல்லது அதற்கு பசி எடுத்ததால் விழித்துக் கொண்டதா? அல்லது அது தூங்கவே இல்லையா? என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் அந்த நாய் விழித்திருந்தது மட்டும் உண்மை.
அதிகாலை நேரத்தில் சமையற்கட்டுக்குள் சென்ற நாய் எதைத் தேடியதோ தெரியவில்லை. அந்த முயற்சியில் அங்கிருந்த OVEN எனப்படும் சமைக்கும் இயந்திரத்தை ON செய்துவிட்டு சென்றுவிட்டது. அதன்காரணமாக அந்த இயந்திரம் சூடானது.
OVEN-க்கு மேலிருந்த பொருட்களிலும் வெப்பம் பரவ, திடீரென அந்த இயந்திரம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதனால் அருகில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியது.
இதைப்பற்றி ஏதும் அறியாத உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது APPLE HOME POD எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவி அதிக வெப்பத்தை உணர்வதாக எச்சரிக்கை செய்தது. அதைக்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி எழுந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், தீ விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் கருவியை வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொருத்த வேண்டியது அவசியம் என அமெரிக்க தீயணைப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதே போல் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை அடுப்பு, OVEN உள்ளிட்டவற்றின் மீது வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.