மகாராஷ்டிராவை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் கூடுதல் சலுகைகளைப் பெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில், கோடிக்கணக்கான சொத்துகளைக் கொண்டுள்ள அவர் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2023-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பூஜா கேத்கர், அகில இந்திய அளவில் 841-வது இடம் பெற்ற நிலையில், தற்போது பயிற்சிக்காலத்தில் உள்ளார்.
இவர், பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. அவரது சொந்தக் காரில் சைரன் வைத்து வலம் வந்ததோடு, மகாராஷ்டிர அரசு என்ற ஸ்டிக்கரை ஒட்டி பயன்படுத்தியுள்ளார். பூஜாவின் தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பதால், அவரது நெருக்கடியால் பூஜாவிற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுமார் 42 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டுள்ள பூஜா கேத்கர், ஓபிசி இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.
அவரது தந்தையின் ஆண்டு வருமானம் 42 லட்சம் ரூபாய் ஆகும். இது தவிர்த்து பூஜாவின் தந்தைக்கு 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. பார்வை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறியும் பூஜா, யுபிஎஸ்சி தேர்வில் சிறப்பு சலுகைகளைப் பெற்றுள்ளார். இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு அமைத்துள்ள ஒரு நபர் குழு, 2 வாரங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.