முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான சேவை இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பொது மருத்துவம் உள்ளிட்ட ஒருசில முதுநிலை படிப்புகளைத் தவிர, பிறதுறைகளில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கான சேவை இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் இந்த நடவடிக்கையால், அரசு மருத்துவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய பொதுமக்களின் நலனுக்கும் எதிராக அமைந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளை பலவீனப்படுத்துவதோடு, சுகாதாரத்துறையின் அடிப்படை கட்டமைப்பையே சீர்குலைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.