டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தப் புகாரில் அமலாக்கத் துறையினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தனர்.
அமலாக்கத் துறையினர் கைது செய்தது சட்டவிரோதம் என்றும், தனக்கு ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த நீதிபதிகள், இந்த வழக்கை வேறு ஒரு விரிவான அமர்வுக்குப் பரிந்துரை செய்தனர்.
மேலும் மதுபான கொள்கை வழக்கில் 90 நாட்களுக்கும் மேலாக கெஜ்ரிவால் சிறைவாசம் அனுபவித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவர் மக்கள் பிரதிநிதி என்ற முறையில், முதல்வர் பணிகளை தொடர்வது குறித்து கெஜ்ரிவாலே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தனர்
இதே மதுபான கொள்கை வழக்கில் சிபிஐயும் விசாரித்து வருவதால், இடைக்கால ஜாமீன் கிடைத்தாலும் கெஜ்ரிவால் உடனடியாக சிறையிலிருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.