வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுதர கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் சலுப்பனோடை கிராமத்தை சேர்ந்த பாண்டி – பஞ்சவரணம் தம்பதியருக்கு பாண்டிச்செல்வி, போதும், சிநேகா, தேவி என 4 பெண் குழந்தைகள் உள்ளன.
வீட்டின் வறுமை காரணமாக பாண்டி அபுதாபி நாட்டிற்கு கம்பி கட்டும் வேலைக்காக சென்றுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக பணமும் அனுப்பாமல் குடும்பத்துடன் தொடர்பில் இல்லாமலும் இருந்த அவர், கடந்த வாரம் திடீரென மனைவியை தொடர்பு கொண்டு ஊர் திரும்ப பணம் அனுப்புமாறு கோரியுள்ளார்.
இதையடுத்து கடந்த 10ஆம் தேதி பாண்டி இறந்து விட்டதாக அங்கிருந்த நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பஞ்சவர்ணம் தனது மகள்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டுவரக்கோரி மனு அளித்தார்.