தமிழகத்தின் மெட்ரோ போன்ற முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில், தமிழ்நாட்டின் ரயில்வே, நெடுஞ்சாலை, விமான நிலையம் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டுக்கு 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய ஆட்சியில் 2024- 2025 பட்ஜெட்டில் 6 ஆயிரத்து 331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அதேபோல கடந்த 2014ம் ஆண்டு தமிழக தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 4 ஆயிரத்து 985 கி.மீ. ஆக இருந்ததாகவும், இது தற்போது 6 ஆயிரத்து 806 கி.மீ ஆக அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அதுமட்டுமில்லாமல் சென்னை விமான நிலையம் சுமார் 2 ஆயிரத்து 467 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் 15 லட்சம் வீடுகள் கட்டித்தர 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் விமான போக்குவரத்து தொடர்பான 5 திட்டங்களுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது