ஒடிசாவில் உள்ள உலக புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் ஆலயத்தில் உள்ள ரத்ன கருவூல அறை, 46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது. பொக்கிஷ அறை திறக்கப்பட்டதை அடுத்து கருவூலத்தில் உள்ள தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட நவரத்ன நகைகள் ஆபரணங்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. நாள்தோறும் உலகமெங்கும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இந்த கோயிலுக்குவருகின்றனர். இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் பூரி ஜெகநாதர் கோவில் திகழ்கிறது.
இந்த பழமையான கோவிலில் உள்ள ரத்ன கருவூல பொக்கிஷ அறையில் ஏராளமான விலையுயர்ந்த தங்கம், வெள்ளி,வைரம் உள்ளிட்ட நவரத்ன நகைகள், மற்றும் விலை மதிப்புமிக்க ஆபரணங்கள் பல ஆண்டுகளாவே பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 46 ஆண்டுகளாக இந்த ரத்ன கருவூல பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்தது.
இந்த கருவூலத்தில் ஜெகநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விலைமதிப்பற்ற தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளன. ஒடிசாவின் மன்னர் அனங்கபீமா தேவ், சுவாமிக்கு நகைகள் தயாரிப்பதற்காக 2.5 லட்சம் மத்தாசு தங்கத்தை நன்கொடையாக அளித்திருக்கிறார்.
இந்த ரத்ன கருவூல பொக்கிஷத்தில், உள் கருவூலம் ,வெளி கருவூலம் என்று இரண்டு அறைகள் உள்ளன. அதில் 128.380 கிலோ எடையுள்ள 454 தங்கப் பொருட்களும், 221.530 கிலோ எடையுள்ள 293 வெள்ளிப் பொருட்களும் இருந்தன.
இது தவிர, தங்கம், வெள்ளி தவிர நவரத்தினங்களும் கருவூலத்தில் உள்ளன. வைரம், பவளப்பாறைகள் மற்றும் முத்துக்களால் ஆன தகடுகளும் இதில் இருந்தன. இதில் 140 வெள்ளி நகைகள் உள்ளன. மேலும், தங்கம், வைரம், பவளம் மற்றும் முத்துக்களால் செய்யப்பட்ட தட்டுகளும் இருந்தன.
1805ம் ஆண்டில், அப்போதைய பூரி கலெக்டர் சார்லஸ் குரோம் 1,333 பொருட்களை உள்ளடக்கிய உள் அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபரணங்களின் பட்டியலை உருவாக்கி வைத்தார்.
ரத்ன கருவூலத்தில் 128 தங்க நாணயங்கள், 1,297 வெள்ளி நாணயங்கள், 106 செப்பு நாணயங்கள் மற்றும் 24 பழங்கால தங்க நாணயங்கள் அடங்கிய அறைகள் இருப்பதாக பல்வேறு வதந்திகள் நிலவி வருகின்றன. 1985 ஆம் ஆண்டு தங்கம் பழுதுபார்க்கும் பணிக்காக உள் அறையும் திறக்கப்பட்ட போது எந்த கணக்கெடுப்பும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மக்களவை தேர்தல் மற்றும் ஒடிசா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் , இந்த ரத்ன கருவூல பொக்கிஷத்தின் சாவி குறித்த சர்ச்சைகள் எழுந்தன. ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
ரத்ன கருவூலத்தின் உள் அறையை திறந்து அதிலுள்ள விலை உயர்ந்த பொருட்களை கணக்கெடுக்கவும், மராமத்து பணிகளை மேற்பார்வையிடவும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் ரத் தலைமையில் 16 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மாநில அரசு அமைத்தது.
தொடர்ந்து, பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ரத்ன கருவூல பொக்கிஷ அறை ஜூலை 14 ஆம் தேதி திறக்கப்படும் என ஒடிசா மாநில சட்ட அமைச்சர் பிரிதிவிராஜ் ஹரிசந்தன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, பொக்கிஷ அறை தகுந்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டது . நவரத்தினங்களுக்குப் பாதுகாப்பாக ஏதேனும் தெய்வ சக்தி இருக்கக் கூடும், அறையைத் திறந்தால், திறப்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்தும் பாதிப்பும் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.
பொக்கிஷ அறையைத் திறப்பதற்கு அனுமதி வேண்டி லோக நாதர் கோயிலில் பூஜை நடந்தது. அங்கிருந்து அக்ஞய மாலை எடுத்து வந்து ஜெகநாதர் கோயிலுக்கு அர்ச்சகர்கள் வரும் போது ஹர ஹர மகாதேவா ஜெய் ஜெகன்னாத் என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.
தொடர்ந்து கோயில் நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் ரத் முன்னிலையில் கருவூல பொக்கிஷ அறை ஞாயிற்று கிழமை நண்பகல் நண்பகல் 1.28 மணி அளவில் திறக்கப்பட்டது. கருவூலத்தில் உள்ள நவரத்ன நகைகள் ஆபரணங்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருக்கிறது.
கடந்த 1978ம் ஆண்டு கடைசியாக இந்த ரத்ன கருவூல பொக்கிஷ அறை திறக்கப்பட்ட போது மொத்த பொருட்களை எண்ணி முடிக்க 70 நாட்களுக்கு மேல் ஆனது. ஆனால் இப்போது நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் , விரைவில் பனி நிறைவுறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மொத்த ஆபரணங்கள் பட்டியலை டிஜிட்டல் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு பணியையும் மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொக்கிஷ அறையில் பலதரப்பட்ட பூச்சிகளும் விஷ பாம்புகளும் இருக்கக் கூடும் என்பதால் , பாம்பு பிடிப்பவர்களும் அவசர உதவிக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர். மேலும்,மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பாம்பு விஷ முறிவு மருந்துகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் , பொக்கிஷ அறையைத் திறந்த போது, அங்கே எந்த வித பாம்புகளோ பூச்சிகளோ இல்லை என்று பூரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ரத்ன கருவூல பொக்கிஷ அறையைத் திறப்பவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு வரும் என்றார்கள். ஆனால் அறையை திறந்த யாருக்கும் எந்த பாதிப்பும் வரவில்லை என ஓய்வு பெற்ற நீதிபதி விஸ்வநாத் ரத் தெரிவித்திருக்கிறார்.
46 ஆண்டுகளுக்குப் பிறகு பொக்கிஷ அறை திறக்கப்பட்டதால், பக்தர்கள் ஆர்வத்துடனும் கோயிலைச் சுற்றி குவிந்திருந்தனர்.