திராவிட கட்சிகள் 57 ஆண்டுகள் செய்யாததை பாமக ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாமகவின் 36-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,
இன்றைக்கு தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கை, நீர் மேலாண்மை கொள்கை, காலநிலை மாற்ற கொள்கை, வேளாண் துறைக்கு தனியான பட்ஜெட், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டமாக அறிவித்தது என அனைத்திற்கும் பாமக தான் காரணம். பெரியார், அம்பேத்கர், கார்ல் மாக்ஸ் ஆகிய மூவர்தான் பாமகவின் முன்னோடிகள்.
ஒரு பைசா செலவு இல்லாமல் 56,300 வாக்குகளை சுயமரியாதையோடு சுயமாக பாமக பெற்றிருக்கிறது. அனைவரையும் சார்ந்த கட்சிதான் பாமக. சமூக நீதிதான் பாமகவின் உயிர் மூச்சு..
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் பெரியாரின் கனவு. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
மின்கட்டண உயர்வை ரத்து செய்யவில்லை என்றால் பாமக சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். நெல்லை காங்கிரஸ் நிர்வாகி, சேலம் அதிமுக நிர்வாகி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை, கடலூரில் பாமக நிர்வாகி, நேற்று நாம் தமிழர் நிர்வாகி என இத்தனை வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது..
முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் ? முதலமைச்சரின் கீழ் தான் காவல்துறை இயங்குகிறது. சட்ட ஒழுங்குக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
முதல்வரால் இந்த துறையை நிர்வாகிக்க முடியவில்லை என்றால் இந்த துறையை வேறொரு அமைச்சரிடம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.