ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரையை ஏற்று என்.கோட்டீஸ்வர் சிங் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அவர்கள் இருவரும் பதவியேற்கும்பட்சத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயரும். கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுபெற்ற ஆர்.மகாதேவன், கடந்த ஆண்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதேபோல கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் கோட்டீஸ்வர் சிங், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும்பட்சத்தில், அந்தப் பதவியை வகிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த முதலாவது நபர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.