மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற அனைத்து கட்சிக் கூட்டம் வரும் 21-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நிகழாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை வரும் 23-ஆம் தேதி அவர் தாக்கல் செய்யவுள்ளார். இதையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு வரும் 21-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்ற அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.