நாசாவின் உதவியோடு ராமர் பாலத்தின் துல்லியமான வரைபடத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ராவணனிடம் சிக்கிய சீதையை மீட்க ராமர் இலங்கை செல்வதற்காக பாலம் கட்டப்பட்டதாக கூறுகிறது ராமாயணம். அது ராமர் பாலம், ராம் சேது, ஆதாம் பாலம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதுபற்றி கடந்த காலங்களில் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் ராமர் பாலத்தின் விரிவான வரைபடத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் உதவியுடன் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது நாசாவின் ICESat-2 செயற்கைக்கோளில் உள்ள லேசர் கடலின் ஆழமற்ற பகுதிகளில் போட்டான் அல்லது ஒளித்துகள்களை ஊடுருவச் செய்து நீருக்கு அடியில் உள்ள எந்தவொரு கட்டமைப்பையும் படம் எடுக்கும் திறன் கொண்டது. அதன் மூலம் 6 ஆண்டுகள் தரவுகள் சேகரிக்கப்பட்டு ராமர் பாலம் குறித்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளித்துறையின் கீழ் இயங்கும் தேசிய தொலையுணர்வு மையத்தின் ஜோத்பூர் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ராமர் பாலத்தின் 99 புள்ளி 98 சதவீத பகுதிகள் ஆழமற்ற மற்றும் மிக ஆழமற்ற நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. குறிப்பாக 29 கி.மீ. நீளம் கொண்ட ராமர் பாலம், கடற்பரப்பில் இருந்து 8 மீட்டருக்கு கீழே இருப்பதாக வரைபடம் கூறுகிறது.
ராமேஸ்வரத்தின் தென்கிழக்கில் உள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் மன்னார் தீவு வரை ராமர் பாலம் அமைந்துள்ளது. அத்துடன், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திக்கு இடையே 2 முதல் 3 மீட்டர் ஆழம் கொண்ட 11 குறுகிய கால்வாய்களும் கண்டறியப்பட்டுள்ளன.
மிக ஆழம் குறைந்த இடத்தில் பாலம் இருப்பதால் கப்பல் மூலம் சென்று அப்பகுதியை ஆய்வு செய்ய முடியாது. கடந்த 1480-ஆம் ஆண்டு வரை பாலம் நீருக்கு மேலே இருந்ததாகவும், புயலின்போது தண்ணீரில் மூழ்கியதாகவும் ராமேஸ்வரம் கோயிலில் பதிவுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.