அமெரிக்காவின் ஹிட்லர் என தம்மை கடுமையாக விமர்சித்த J.D.VANCE-ஐயே துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார் டொனால்டு ட்ரம்ப். இதில் வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்தான் தமக்கான துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வார். இதை RUNNING MATE என்று சொல்வார்கள். அதன்படி ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் செனட்டர் J.D.VANCE-ஐ தமது துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார் ட்ரம்ப்.
ஒரு காலத்தில் அவரை மிகவும் கடுமையாக விமர்சித்தவர் வான்ஸ். ‘MAKE AMERICA GREAT AGAIN’ பரப்புரை, வர்த்தகம் மற்றும் வெளியுறவு தொடர்பான கொள்கைகள், புலம்பெயர்ந்தோர் சட்டங்கள் ஆகியவற்றில் ட்ரம்ப்பை கடுமையாக எதிர்த்தவர். உச்சபட்சமாக அமெரிக்காவின் ஹிட்லர் என ட்ரம்ப்பை வார்த்தையால் வறுத்தெடுத்தவர்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை… நிரந்தர எதிரியும் இல்லை என்பது அமெரிக்காவுக்கும் பொருந்துமல்லவா? அப்படி ஒரு கட்டத்தில் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக மாறிய வான்ஸ் தற்போது அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராகியிருக்கிறார்.
1984-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி ஓஹியோவின் MIDDLE TOWN-ல் பிறந்தவர் J.D.VANCE என்றழைக்கப்படும் JAMES DAVID VANCE. தொடக்கத்தில் அமெரிக்க கடற்படையின் ஒருபிரிவில் பணியாற்றிய வான்ஸ், ஈராக் போரில் பங்கேற்றுள்ளார். அதன் பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா சிலிகுரி என்பவருடன் ஏற்பட்ட அறிமுகம் 2014-ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பெற்றோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உஷா பிறந்தது வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான். அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடமும் முக்கிய நிறுவனங்களிலும் சட்ட வல்லுநராக பணியாற்றியுள்ளார் உஷா.
அவரைப் பற்றி பல்வேறு தருணங்களில் பெருமையாக பேசியிருக்கிறார் வான்ஸ். பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் தமது ஆத்ம தேடலின் வழிகாட்டி உஷா என்பதை உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார். தம்மை இயல்புக்கு அழைத்து வந்தவர் என்றும், எப்போதெல்லாம் தலைக்கனம் வருகிறதோ அப்போதெல்லாம் என்னை விட உஷா அதிகம் சாதித்தவர் என நினைத்துக்கொள்வேன் என்றும் தெரிவித்திருக்கிறார் வான்ஸ். சில மணி நேரங்களிலேயே ஆயிரம் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை படித்துவிடுவார் என தமது இணையரை புகழ்ந்திருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் உள்ளனர்.
2016-ஆம் ஆண்டு வான்ஸ் எழுதிய HILLBILLY ELEGY என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்ததுடன் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக இருக்கும் நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரின் கணவர் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.