சென்னை ஜாம்பஜாரில், 14 வயது சிறுவன் தாறுமாறாக கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 10-ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் நேற்று மாலை அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று, அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், 10-ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த காரை விரட்டிப் பிடித்து உள்ளே இருந்த இருவரை தாக்கத் தொடங்கினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஜாம்பஜார் போலீசார், இருவரையும் மீட்டு போக்குவரத்து புலனாய்வு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தது 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
அச்சிறுவன், தனது பெரியப்பாவின் காரை எடுத்துக்கொண்டு, நண்பரையும் உடன் அழைத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, கார் உரிமையாளர் மீது போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.