பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதன் மூலம் அவற்றின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டிருப்பதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வளாகத்திற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் நேற்று வருகை தந்தார். கடலோர கண்காணிப்பு அமைப்பு, சுற்றளவு பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் செயல்விளக்கம் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.
பொலிவுறு நகர அனுபவ மையம், ஆராய்ச்சியையும், மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் தயாரிப்பு மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அடுத்த தலைமுறைத் திட்டங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். தனது முதல் வருகையை நினைவுகூரும் வகையில் ஒரு மரக்கன்றையும் பாதுகாப்பு இணை அமைச்சர் நட்டார்.
அப்போது அதிகாரிகளிடையே உரையாற்றிய சஞ்சய் சேத்,
பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதும், போட்டி மிகுந்த சகாப்தத்தில் போட்டித்தன்மையுடன் இருப்பதும் கடமையாகும் என்றார்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் பாராட்டிய திரு சஞ்சய் சேத், மேக் இன் இந்தியா முன்முயற்சிக்கும், தற்சார்பு திட்டத்திற்கும் இந்தப் பொதுத்துறை நிறுவனம் கணிசமான பங்களிப்பை செய்து வருவதாகக் கூறினார்.
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து பல உள்நாட்டு உபகரணங்களையும் அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு 150 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.