பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மத்திய பட்ஜெட்டை வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. 1860ம் ஆண்டு முதல் இதுவரை, 77 முழுமையான நிதிநிலை அறிக்கைகளும், 15 இடைக்கால நிதிநிலை அறிக்கைகளும் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பட்ஜெட் வரலாறு குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இந்திய அரசுக்கு வருவாயாக கிடைக்கும் நிதியின் அளவு எவ்வளவு ? வரும் ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் எந்த எந்த துறைகளில் எவ்வளவு நிதி செலவழிக்கப்படும் ? இதனை முன்கூட்டியே மதிப்பீடு செய்யும் அறிக்கை தான் பட்ஜெட் எனப்படும் நிதிநிலை அறிக்கை.
இந்திய அரசியலமைப்பின் 112ஆவது பிரிவின் கீழ் மத்திய நிதிநிலை அறிக்கையை, இந்திய அரசு தாக்கல் செய்கிறது.
‘சிறிய பை’ என்பதைக் குறிக்கும் சொல் பிரெஞ்சு ‘போகெட். இதிலிருந்து தான் ‘ ‘பட்ஜெட்’ என்ற சொல் வந்துள்ளது.
ஆங்கிலேய ஆட்சியில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, அடிமை இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1860ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி இந்தியாவின் முதல் பட்ஜெட்டை இந்திய வைஸ்ராய் நிர்வாகக் குழுவின் நிதி உறுப்பினராக இருந்த, ஸ்காட்ஸ்மேன் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டை 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்றைய மத்திய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்த சண்முகம் செட்டியார், நேரு அமைச்சரவையில் ஓராண்டு காலம் மட்டுமே நிதியமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் பட்ஜெட் ஏழு மாதங்களுக்கு மட்டுமே ஆன இடைக்கால பட்ஜெட் ஆகும். சண்முகம் செட்டியாரே ” இடைக்கால பட்ஜெட்” என்ற சொல்லை உருவாக்கித் தந்தவர். பிறகு ,மக்களவை தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில், இடைக்கால பட்ஜெட் என்பது இந்தியாவில் வழக்கமான நடைமுறையாக மாறியது.
இந்தியாவின் முதல் பட்ஜெட் நாட்டின் பொருளாதார எதிர்காலத்துக்குப் பெரிதும் வழிவகை செய்தது.
இப்போதெல்லாம், காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் மாலை 5 மணிக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பிரிவினையின் காரணமாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் நாடு எரிந்து கொண்டிருந்த நேரத்தில் முதல் பட்ஜெட்டை வெற்றிகரமாக தாக்கல் செய்தார் சண்முகம் செட்டியார்.
குறிப்பாக, 1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாணயத்தை பயன்பாட்டில் கொண்டிருக்கும் என்று இந்த பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் முதல் பட்ஜெட்டில், 197.39 கோடி ரூபாய் என்று மொத்த செலவில், பாதுகாப்புக்காக நாட்டின் இராணுவத் துறைக்கு 92.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் இந்திய பிரதமர்களும் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 1958 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவும், 1970 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும்,1987ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஆவார். இவர் பிரதமராக இருந்தபோது, நிதித்துறையை கவனித்து வந்தார்.
2019ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன் மூலம் இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றார்.
இந்திய வரலாற்றில், பத்து மத்திய பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்த ஒரே நபர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மட்டுமே. அவருக்கு அடுத்து, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஒன்பது பட்ஜெட்களை தாக்கல் செய்திருக்கிறார்.
2,000ஆம் ஆண்டு வரை, பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், அதே ஆண்டில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை அவை தொடங்கியவுடனேயே நடக்கும் நிகழ்வாக காலை 11 மணிக்கு மாற்றியமைத்தார். இதுவே இன்றுவரை தொடர்கிறது.
2014ம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி , தனது பட்ஜெட் உரையை இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தார். இதுவே, மிக நீண்ட நேரத்துக்கு வாசித்த பட்ஜெட் உரை என்று குறிப்பிடப் படுகிறது.
2017ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இரு வேறு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப் பட்டு வந்தது. ஒன்று பொது பட்ஜெட். மற்றொரு ரயில்வே பட்ஜெட். பொது பட்ஜெட்டை நிதியமைச்சரும், ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சரும் தாக்கல் செய்து வந்தனர்.
அந்த வழக்கத்தை 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த பட்ஜெட் என்ற நடைமுறையை உருவாக்கினார். நாட்டின் ஒருங்கிணைந்த ஒரே பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆவார்.
1950ம் ஆண்டு வரையில் குடியரசு தலைவர் மாளிகையில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்பட்டு வந்தது. பிறகு டெல்லியில் மின்டோ சாலையில் உள்ள அச்சகத்தில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்கப் பட்டு வந்தது.1980 ஆம் ஆண்டில், மத்திய நிதி அமைச்சகத்தில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது. இன்றுவரை பட்ஜெட் ஆவணங்கள் நிதி அமைச்சகத்தில் உள்ள அச்சகத்தில் அச்சடிக்கப்படுகிறது.
பட்ஜெட் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பாரம்பரிய முறையிலான சிவப்பு ப்ரீஃப்கேஸ் முறைக்கு மூடுவிழா நடத்தி விட்டு, பட்ஜெட் ஆவணத்தை நாடா துணியால் சுற்றப்பட்ட தேசிய சின்னத்துடன் கூடிய துணிப்பையில் வைத்து கொண்டு செல்லும் வழக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, 2021 ம் ஆண்டு , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய பட்ஜெட் வரலாற்றில் முதல்முறையாக, காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ஆவணங்களின்றி தமது டிஜிட்டல் `பட்ஜெட்’-ஐ ‘ ‘மேட் இன் இந்தியா’ டேப்லெட்டில் இருந்தே வாசித்தார்.
இத்தனை நீண்ட வரலாறு கொண்ட மத்திய அரசின் பட்ஜெட் என்றாலே வெவ்வேறு பிரிவினருக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். என்னென்ன வரிகள் யார் யாருக்கு ?, என்னென்ன சலுகைகள் ? என்னென்ன புது திட்டங்கள்? என்னென்ன புதிய அறிவிப்புகள் ? என்ற ஆர்வமே பட்ஜெட் குறித்து மக்களின் எதிர்பார்ப்புக்கான காரணம்.