நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவான விவகாரத்தில், தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் தேர்வு முகமையை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தேசிய தேர்வு முகமை கடந்த வாரம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த வழக்கை எதிர்நோக்கி காத்திருப்பதால் இவ்விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
மேலும், வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் நிரூபித்தால் மட்டுமே தேர்வை ரத்து செய்ய முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இளநிலை நீட் தேர்வில் முதல் நூறு இடங்களைப் பெற்ற மாணவர்கள் எந்தெந்த நகரங்களைச் சேர்ந்தவர்கள் என அறிய விரும்புவவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.