புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின்போது எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் உரையை கவனிக்காமல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செல்போனில் மூழ்கியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், ஐயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், கூட்டணியில் உள்ள இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கருத்துக்களை அவ்வப்போது எடுத்துரைத்து தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தி வருவதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சி அமைதி காப்பதாகவும் தெரிவித்தார்.
கட்சி வளர வேண்டும் என்றால் தைரியமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினர். ஜெயக்குமார் கொலை வழக்கு நடைபெற்று மூன்று மாதத்திற்கு மேல் ஆவதாகவும், ஆனால் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் பேசியபோது அவரது உரையை கவனிக்காமல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மொபைல் போனில் மூழ்கி இருந்தது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.