இந்திய விமான நிலையங்களில் இன்று அதிகாலை 3 மணி முதல் இயல்பு நிலை திரும்பியது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் இயங்குதளம் முற்றிலுமாக முடங்கியது.
இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் கடும்பாதிப்பை சந்தித்தன. மேலும், இந்திய விமான நிறுவனங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.
இந்தியாவில் 170-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இந்நிலையில் விமான நிலையங்களில் இன்று அதிகாலை முதல் நிலைமை சீரானது என்றும் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், விமான நிலையங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரத்தான விமான பயணங்களுக்கான கட்டணம் திருப்பி கொடுப்பது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.