பசிபிக் பெருங்கடலில் உள்ள முக்கிய தனிமங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்குரிய அனுமதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
165 புள்ளி 25 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு… சுமார் 25,000 குட்டித் தீவுகள்… உலகில் உள்ள எரிமலைகளில் 70 விழுக்காடு போன்றவற்றைக் கொண்டது பசிபிக் பெருங்கடல் பகுதி. இது தவிர கடலுக்கு அடியில் 40 ஆயிரம் மைல் நீளத்துக்கு மலைத்தொடர் ஒன்றையும் கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பசிபிக் பெருங்கடலில் ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அங்கு முக்கிய தனிமங்கள் இருப்பதே அதற்கு காரணம்.
இந்தியா மட்டுமல்ல எந்தவொரு நாடும் நினைத்த உடன் பெருங்கடலில் ஆய்வு நடத்த முடியாது. அதற்கு, ஐ.நா.வின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்ட INTERNATIONAL SEABED AUTHORITY என்ற அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்தியப் பெருங்கடலில் ஆய்வு செய்ய இந்தியாவுக்கு இரண்டு அனுமதிகள் உட்பட இதுவரை 31 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் கடலை தோண்டி ஆய்வு நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள முக்கிய தனிமங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி கேட்டு இந்தியா விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் இதற்கான அனுமதியை பெற்றுள்ளன.
பசிபிக் பெருங்கடலில் உள்ள CLARION – CLIPPERTON ZONE என்னும் இடத்தில் ஆய்வு செய்வதே இந்தியாவின் திட்டம். ஹவாய் மற்றும் மெக்சிகோவுக்கு இடையே உள்ள இந்த பரந்த பரப்பில் MANGANESE, NICKEL, COPPER, COBALT போன்ற தனிமங்கள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
அண்டை நாடான சீனாவுடன் ஒப்பிடுகையில் கடற்பரப்பு ஆய்வில் இந்தியா சற்று பின்தங்கி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே கடற்பரப்பை தோண்டி ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கக்கூடாது என சில நாடுகள் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.