ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை அபார வளர்ச்சி கண்டிருப்பதாக மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு-காஷ்மீருக்கு 1 கோடியே 8 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல ஜம்மு-காஷ்மீரில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்துக்கு பின்னர், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கல்வீச்சு சம்பவங்கள் நிகழவில்லை என்றும் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
கடந்த 15-ஆம் தேதி வரை தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 10 பேரும், பொதுமக்கள் 10 பேரும் உயிரிழந்ததாக நித்யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.