தேசத்தின் பாதுகாப்பில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25-ம் ஆண்டு தினத்தை ஒட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் திராஸில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம் – லே பகுதியை இணைக்கும் ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
15 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் கடந்த காலத்தில் அடைந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்கவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானின் நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். தேசத்தின் பாதுகாப்பில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, அக்னி வீரர்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.