சீனாவின் பொருளாதாரத்தை அந்நாடே சீர்குலைக்கிறது என்றும், பொருளாதார சரிவினால் பணப்புழக்கச் சிக்கலில் மீள முடியாத வகையில் சிக்கி இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வது ஏன்? என்பது பற்றி பார்ப்போம்.
1998ம் ஆண்டு ஜப்பானின் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. வங்கிகளின் வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அருகில் சென்றது. அரசின் நிதிக் கொள்கையின் தாக்கத்தால் இந்த பெரும் சரிவை ஜப்பான் கண்டது. அது போன்ற நெருக்கடியில் தற்போது சீனா சிக்கியிருக்கிறது.
சீனாவை அமெரிக்காவிற்கு போட்டியாக ஒரு தொழில்நுட்ப சக்தியாக மாற்றுவதற்கான நீண்டகால செயல் திட்டங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்திருந்தார்.
உண்மையில், பலவீனமான பொருளாதார வளர்ச்சி, கடுமையான கடன்கள் மற்றும் வணிக வீழ்ச்சிகளுடன் சீனா போராடி வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் மூன்று முறை வைப்பு வட்டி விகிதங்களை குறைத்துள்ள சீன வங்கிகள் இந்த ஆண்டு முதல் முறையாக கடந்த வியாழக் கிழமை வட்டி விகிதங்களைக் குறைத்திருக்கிறது.
சீனாவின் மக்கள் வங்கி, கடன் வாங்கும் செலவைக் குறைக்க நடுத்தர கால கடன் வசதியின் வட்டி விகிதத்தை குறைத்தது. 7 நாள் கடனுக்கான விகிதம் 1.7 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு திங்களன்று மத்திய வங்கி பல பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களைக் குறைத்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியக் கொள்கை நிர்ணயக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
சீனாவின் முக்கிய வங்கிகள் வைப்பு வட்டி விகிதங்களை வெகுவாக குறைத்துள்ளன. இந்த அறிவிப்புகள் வந்தவுடன் சீன பங்கு சந்தைகளில் வீழ்ச்சிக் காணப்பட்டது.
இதற்கிடையில், நாட்டின் தொழில்துறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் கையிருப்பை மாற்றியமைப்பதற்கான திட்டத்துக்கு 41 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீன அரசு முதல்முறையாக ஒதுக்கியுள்ளது.
நுகர்வோர் செலவினங்களை உயர்த்த, சீன அரசு சிறப்பு பத்திரங்களை விற்பதன் மூலம் திரட்ட முடிவு செய்திருக்கிறது.
ஏற்கெனவே, பொருளாதாரம் பற்றிய நிச்சயமற்ற தன்மை சீனாவில் நிலவுகிறது. சீனாவின் தனிநபர் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. கடன் வாங்க கூட யாரும் முன்வராத நிலையில், வங்கிகளுக்கு வீழ்ச்சி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பொருளாதாரத்தை சீர்படுத்த, வைப்பு விகிதங்களைக் குறைப்பதால் வங்கித் துறையின் நிகர லாபம் அதிகரிக்கும் என கடன் வாங்கும் விகிதங்களை எளிதாக்க சீன அரசு முடிவெடுத்துள்ளது.
மில்லியன் கணக்கான விற்கப்படாத வீடுகளை வாங்க அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் பொது துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
சீனக் குடும்பங்கள் பழைய கார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வீடுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தையும் அரசு கொண்டு வந்துள்ளது.
பழைய பொருட்களை மாற்றிவிட்டு புதியது வாங்க, சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் மானியங்கள் மற்றும் நிதி வழங்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் வாட்டர் ஹீட்டர்கள் போன்ற புதிய வீட்டு உபயோக பொருட்களுக்கான மானியங்கள் விற்பனை விலையில் 15 சதவீதம் மானியங்கள் அளிக்கப்படும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது. இதற்காக சீன அரசு பல பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிக்க முடிவெடுத்துள்ளது.
சீனாவுடன் தீவிர வர்த்தகப் போரை நடத்திய டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் , சீனாவின் பொருளாதாரம் இன்னும் கடுமையாக வீழ்ச்சியடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் செய்தது போலவே இந்த முறையும் அதிபரானால் டொனால்ட் ட்ரம்ப், சீனாவில் இருந்து 360 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 60 சதவீத அமெரிக்க இறக்குமதிகளுக்கு கடுமையான வரிகளின் கீழ் வரலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அப்போது சீனா மேலும் வீழ்ச்சியடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரி்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக திகழும் சீனாவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் பிற உலக நாடுகளை நிச்சயம் பாதிக்கும்.
இப்போது சீன நிதி நெருக்கடி என்னும் பொறியில் சிக்கி இருக்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நிர்வாகம் சிக்கலைச் சமாளிக்க, மக்களிடம் நுகர்வு கலாச்சாரத்தை ஏற்படுத்துதல் , தொழில்துறையின் லாபத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் ஜிடிபியில் 5 சதவீத வளர்ச்சியை அடைதல் என்ற மூன்று பறவைகளைப் பிடிக்க ஒரே கல்லை எறிகிறது சீனா.
இந்த நடவடிக்கை வெற்றி பெறாது என்று உலக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.