பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான, மதிப்புக்குரிய மாஸ்டர் மாதன் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான, மதிப்புக்குரிய மாஸ்டர் மாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில், பாஜக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு, இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிக்கும், நீலகிரி மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டவர்.
நீலகிரி தேயிலைத் தோட்டப் பிரச்சினைகளுக்கும், மலைப்பகுதிகளில், மனித விலங்கு மோதல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டவர். கடின உழைப்பாளர். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். அவரது மறைவு, தமிழக பாஜகவுக்குப் பேரிழப்பாகும். இன்று, பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன், ஐயா மாஸ்டர் மாதன் அவர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளோம்.
நாளைய தினம், தமிழகம் முழுவதும், தமிழக பாஜக மாவட்ட அலுவலகங்களில், மாஸ்டர் மாதன் அவர்களது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படும். மாஸ்டர் மாதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும். ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.